கதிரடிக்கும் திடல் தாண்டி முத்துலட்சுமி பட்டண்ணதுக்கு செல்லும் முக்கு ரோட்டினை அடைந்தாள். கருமேகக்கூட்டங்கள் போருக்கு செல்லும் படை வீரர்கள் போல் அணி வகுத்து சென்று கொண்டிருந்தன. காற்றின் வேகம் சற்றே அதிகரித்து இருந்தது. காய்ந்த இறகுகள் காற்றில் மிதந்தபடி நாட்டியமாடின . முத்துலட்சுமி பதற்றத்துடன் "அடி ஆத்தி, எம்புட்டு வேகமா காத்து வீசுது, காத்தால போன மனுஷன் சீக்கிரமா வூட்டுக்கு வரப்புடாது" என்று சொல்லிக்கொண்டே ரோட்டை கடந்து வயல் வெளியின் வரப்புகளில் நடக்கத்துவங்கினாள். "யாரது புள்ள, காள, கன்ன தூக்கிக்கிட்டு போற மாலி காத்து வீசுது. இந்த நேரத்துல வயக்காட்டுப்பக்கம் போறது" என்றார் வெள்ளந்தி தாத்தா.
"வணக்கங்கய்யா நாந்தேன் முத்துலட்சுமி, அய்யாகண்ணு மருமகப்புள்ள, அவுக காத்தால காட்டுக்கு வந்தாக, இம்புட்டு நேரமாயியும் வரல. அதேன் ஒரு எட்டு பாத்துட்டு போகலாமுன்னு வந்தேன்". "அட நம்ம வெள்ளையன் பொஞ்சாதியா? என்ன புள்ள காத்து மழையும் கொட்ட கெடக்கு, பொட்ட புள்ள என்னத்துக்கு இம்புட்டு தூரம் வந்த" என்று அன்பாக கடிந்து கொண்டார்.
காற்றின் வேகம் சற்றே குறைந்தது, ஓடிக்கொண்டிருந்த மேகங்கள் ஒன்று கூட துவங்கின. இப்பொழுது முன்பை விட இருள் அதிகமாகியது. "இல்லங்கய்யா, ஒரு நடை அவுகள பாத்து கையோட கூட்டியாந்திறேன்" என்றபடி முத்துலட்சுமி வரப்பினை வேகமாக கடந்தாள்.
மேகக்கூட்டங்கள் தனது சுமையை இறக்க தயாராகின. "போயிட்டு வாமா, நான் இங்கேயே காத்துகிடக்கேன்" என்று வெள்ளந்தி தாத்தா தொழுவத்தை பார்த்தார். முத்துலட்சுமி எதிரே ஒரு உருவம் அசைவது தெரிந்தது. நெற்றியை சுருக்கி யாரென்று பார்த்தாள். அங்க அசைவுகளை கண்டவுடன், தன் கணவர்தான் வருகிறார் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.
"மாமோய், காலையில வந்தியே, கொஞ்சம் சடுதியா வூட்டுக்கு வரப்புடாத" என்று கத்திகொண்டே முன்னேறினாள். காத்திருந்த மேகங்கள், கட்டளை வந்தது போல் தனது தாக்குதலை ஆரம்பித்தது. மம்மட்டியுடன் வந்து கொண்டிருந்த வெள்ளையன் "ஏ புள்ள நீ எதுக்கு இங்க வந்த, அப்படியே நில்லு அங்க நா வாறன். மழையும் மேகமுமா கெடக்கு என்ன தகிரியம் புள்ள உனக்கு" என்று கத்திக்கொண்டே வந்தான்.
மழையின் வேகம் சற்றே அதிகரித்தது. மழைத்துளியின் கணம் பயிரின் பலத்தை பரிசோதிக்க துவங்கியது. முத்துலட்சுமி தனது முந்தானையின் நுனியை தலையில் வைத்துகொண்டு முக்கு ரோட்டினை நோக்கி ஓடினாள் . கனமழையால் வரப்பில் சகதி அதிகமாகியது, அவளால் வேகமாக செல்ல முடியவில்லை. ஆனாலும் அவள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு தெளிவும் நேர்த்தியும் இருந்தது.
ரோட்டின் ஓரத்தில் அமைந்திருந்த ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகள் "மேமே" என்று கூக்குரலிட்டன. அவைகள் அனைத்தும் பயந்தபடி கூட்டமாக அங்கும் இங்கும் அழைந்து கொண்டிருந்தன. "அட என்னது, ஒரு நாளும் இல்லாம, இன்னக்கி இம்புட்டு மிரளுதுக" என்று கூறிக்கொண்டே வெள்ளந்தி தாத்தா ஆடுகளை பிடித்து தொழுவத்திற்குள் அடைத்து கொண்டிருந்தார். இந்த பய புள்ளைய, பயிர போட்டுட்டு உசிர கையில புடிச்சுட்டு இருக்கப்ப இந்த மழை வந்து அம்புட்டயும் நாசமாக்கிடும் போல இருக்கே. மேகத்த பாத்தா கொட்டிக்கிட்டு ஊத்தும் போல இருக்கே" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
வெள்ளையனும், முத்துலக்ஷ்மியும் முக்கு ரோட்டினை நெருங்கிக்கொண்டிருந்தார்கள். மழையின் வேகம் மும்மடங்காய் ஆகியது. வெள்ளையன் லேசாக திரும்பி வயக்காட்டை பார்த்தபடி சென்றான். "அட நீ ஒன்னு வெள்ளையா, மழை ஒன்னும் பெரிசா பெய்யாது. சும்மா போக்கு காட்டுது. பயப்படாம போ. எல்லாம் அவ பாத்துக்குவா" என்று வெள்ளந்தி தாத்தா வெள்ளையனுக்கு ஆறுதல் கூறினார்.
"மச்சான், சீக்கிரமா வா, மழை பெரிசாவதற்குள் வூட்டுக்கு போயிடலாம்" என்று ரோட்டின் மேல் நின்று முத்துலட்சுமி குரல் கொடுத்தால். "அட இரி புள்ள, உசிர கொடுத்து வளத்த பயிறு தண்ணியில கெடக்கு, வூட்டுக்கு போயி என்ன பண்றது" என்று கூறியவாரே ரோட்டினை அடைந்தான்.
வெள்ளையனின் வெளிறிப்போன முகம் மழைத்துளிக்கு மேலே தெளிவாய் தெரிந்தது. வைத்த கண் வாங்காமல் வயல் காட்டையும், வானத்தையும் பார்த்து, கைகூப்பி "ஆத்தா ஒன்ன நம்பித்தான் எம்புள்ளைய உட்டுட்டு போறேன், நீதான் இந்த ஊரை காப்பாத்தனும்" என்று வணங்கி விட்டு சென்றான்.
Monday, January 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment